கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - சேலம் விரையும் ‘மீட்புக்குழுவினர்’
சேலம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம், கருங்கல்பட்டி பகுதியில் உள்ள பாண்டுரங்க நாதர் தெருவில் வசித்துவருபவர் கணேசன். இன்று காலை 6.30 மணி அளவில், இவரது வீட்டில் இருந்து பலத்த சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஜெயலட்சுமி என்பவர் உயிரிழந்தார்.இடிபாடுகளில் சிக்கிய 10 வயது சிறுமி பூஜாஸ்ரீ உயிருடன் மீட்கப்பட்டார். இந்த கேஸ் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.
இதில் மேலும் பத்மநாபன்,அவரது மனைவி தேவி, பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் கார்த்திக் ராம் ஆகியோரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உள்ளிட்டோரும் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் இடிந்து விழுந்த வீடுகளை, கிரேன் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ‘கேஸ் சிலிண்டர் விபத்தில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவருக்கு மட்டும் 90% தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை.கேஸ் சிலிண்டர் வெடித்த இந்த விபத்தில் 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சேலம் வருகின்றனர்‘ என்று கூறினார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.