தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சிறப்புக் கூட்டத்தில், திமுகவினர் அமைதியாக அமர்ந்து வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தாலே முடிவு மாறியிருக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்தார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட உளுந்தை கிராமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் உள்ளது. இங்கு ஓராசிரியர் பயிற்சி மையம், "ஆர்எம்டி பெயின் அன்ட் கேர் டிரஸ்ட்' ஆகியன இணைந்து, ஆசிரியர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை முகாமை நேற்று நடத்தின.

முகாமுக்கு ஓராசிரியர் பள்ளிகள் அமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமாச்சாரி முன்னிலை வகித்தார்.

இதில், ஓராசிரியர் பள்ளி நிறுவனர் வேதாந்தம் ஜி,பாஜக மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இல.கணேசன் பேசியது:

“மாணவர்கள் எதைச் செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் மாணவர்களை நடத்தினால் அனைத்து மாணவர்களும் நல்ல நிலைக்கு வருவார்கள்.

சாதனையாளர்கள் அனைவரும் ஒரு காலத்தில் மாணவர்களே! எனவே, சாதனையாளர்களை உருவாக்குவதில் தூண்டுகோலாக இருப்பவர்களே ஆசிரியர்கள் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், 650 ஓராசிரியர் பள்ளிகளுக்கு, ரூ.40 இலட்சம் மதிப்பிலான சிறிய எழுது மேஜைகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நடந்த புற்றுநோய் பரிசோதனை முகாமில், 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு, பரிசோதனை செய்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசியது:

“சிறையில் இருந்தபடி சசிகலா ஆட்சி நடத்தி வருகிறார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து சட்ட ரீதியாக எடப்பாடி பழனிசாமி முதல்வராகி இருக்கலாம். ஆனால், நியாயத்துக்கும், மக்களின் விருப்பத்துக்கும் விரோதமாக தான் அவர் முதல்வராகியுள்ளார் என்பதே உண்மை.

திமுகவினர் அமைதியாக அமர்ந்து வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தாலே முடிவு மாறியிருக்கும்.

பயத்தினால் கை தூக்கியவர்கள், திமுகவினர் இருக்கும் தைரியத்தில் கை தூக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

திமுக வன்முறையில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டது, அக்கட்சிக்கு அவப்பெயரையே ஏற்படுத்தியுள்ளது என்றுத் தெரிவித்தார்.