நாளை முதல் யாரும் முழு சம்பளத்தை வங்கியில் முழுவதுமாக எடுக்க முடியாது. ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த 8ம் தேதி இரவு மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை முதல் தேதி தொடங்கிவிட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது வீட்டு வாடகை, மளிகை பொருட்கள் வாங்குவது, குடும்பத்தில் உள்ள முதியோருக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் வாங்குவதற்கான பட்டியலை தயார் செய்து விட்டனர்.

ஆனால், யாராலும் தங்களது சம்பள பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாது. ரூ.10 ஆயிரம் மட்டும் எடுக்க முடியும் என அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனர்.

இதுகுறித்து, அரசு அலுவலக உதவியாளர் சங்க மாநில தலைவர் கே.கணேசனிடம் கேட்டபோது, “தமிழகம் முழுவதும் ஏடிஎம்கள் மூடியே கிடக்கிறது. வங்கிகள் அனைத்தும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் காலை 9 மணிக்கு வேலைக்கு வர வேண்டும்.

இப்படி இருக்கும்போது, சம்பள பணத்தை எப்படி வங்கிகு எடுக்க முடியும்? வங்கியில் 3 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே பணம் கிடைக்கிறது. இதனால் வேலை பாதிக்கும் அபாயம் உள்ளது. ஏடிஎம் திறந்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

அதனால் வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் பிரச்சனை தீரும் வரை அரசு அலுவலக ஊழியர்களுக்கு முன்பணமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த பணத்தை சம்பளத்தில் மாதா மாதம் பிடித்துக் கொள்ள அரசு முன்வர வேண்டும்” என்றார்.

நவம்பர் மாத சம்பளத்தை ரொக்கமாக கையில் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

இன்று 14 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்களுக்கு சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

போக்குவரத்து துறையில் 1.40 லட்சம் ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் ரூ. 3ஆயிரம் ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.