நாளை முதல்  பொங்கல் பரிசு...ரேஷன் கடைகளில் விநியோகம்

தமிழக அரசு அறிவித்திருந்த பொங்கல் பரிசு நாளைமுதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் 2 அடி நீள கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் மூலம் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் முகாம்களில் இருக்கும் இலங்கை அகதிகள் ஆகியோருக்கு நாளை முதல் இந்த பரிசுகள் வழங்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகங்களிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இன்று மாலைக்குள் அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்பட்டு விடும். குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது” என்றனர்.