From next year the new curriculum

தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாற்றம் கொண்டு வருவதற்கான புதிய வரைவு பாடத்திட்டத்தை இணையதளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் கல்வி ஆணையத்தின் பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது தமிழக அரசின் பாடத்திட்டம் மிகவும் பழமையானதாக கூறப்பட்டது. மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை மத்திய அரசு இந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கியுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மத்திய அரசின் பாட திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டன. இதனால், தமிழக மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 

நீட் தேர்வு தொடர்பான வழக்கின்போது நீதிபதிகள் தமிழக பாடதிட்டம் மாற்றாதது குறித்து கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. 

அதன்படி, புதிய பாடத்திட்டத்தினை தயாரிப்பு பணியில் 200 கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன் புதிய வரைவு பாடத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இணையதளத்தில் வெளியிட்டார்.

இந்த புதிய பாடத்திட்டம் வரும் 2018 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய பாடத்திட்ட வரைவு www.tnscert.org என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மாணவர்கள் இணையதளத்தில் புதிய பாடத்திட்ட வரைவை பார்த்து கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று பள்ளி கல்வி துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிய பாடத்திட்ட பணிகள் மிக விரைவாக நடைபெற்றுள்ளதாக கூறினார். 

தமிழ்நாட்டில் புதிய பாடத்திட்டம் 4 மாத காலத்தில் முடிக்கப்பட்டு சரித்திர வரலாறு உருவாக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் கூறினார். தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் தயார்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். 

தேசிய அளவில் பிற பாடத்திட்டங்களுக்கு நிகராகவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்து வரும் 12 ஆண்டுகளுக்கு வரப்போகிற மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்கள் தயார் படுத்திக் கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பாடத்திட்ட குழுவின் தலைவர் கூறியுள்ளார்.