இந்தியாவிலிருந்து, இஸ்லாமியர்களைப் பிரிக்க மோடி அரசு முயன்று வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
கடையநல்லூரில் நடைபெற்ற ஷரிஅத் பாதுகாப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது:
“இந்தியாவிலிருந்து, இஸ்லாமியர்களைப் பிரிக்க மோடி அரசு முயன்று வருகிறது. பொது சிவில் சட்டத்தை யாராலும் இந்தியாவில் கொண்டு வர முடியாது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிக் கொண்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து மக்களுக்கு பெரும் இன்னலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
தன்னால் சேமிக்கப்பட்ட பணத்தை கூட இந்தியர்களால் வங்கியிலிருந்து எடுக்க முடியாத நிலையை அரசு உருவாக்கியுள்ளது.
இந்த பணத் தட்டுப்பாட்டால், வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும். அதன் காரணமாக வன்முறை உருவாகும் ஆபத்து ஏற்படும்.
ஒவ்வொரு சமூகமும், சரியான தலைவர்களை முன்னிலைப் படுத்த வேண்டும். அந்தத் தலைவர்கள் மாற்று சமூகத் தலைவர்களாலும் மதிக்கப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் பல்வேறு பிரிவாக இருப்பதை மாற்றி ஒரே அணியாக செயல்பட வேண்டிய நேரம் இது” என்று அவர் தெரிவித்தார்.
