சென்னை விமான நிலையத்தில் 2022ல் மட்டும் ரூ.124 கோடி மதிப்பில் கடத்தல் பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல், 2022 டிசம்பர் 31ம் தேதி வரை, மொத்தம் ரூபாய் 124. 863 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கடந்த 2022 ஜனவரி முதல் தேதியில் இருந்து 2022 ஜனவரி டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நடத்திய சோதனையில், ரூ.94.22 கோடி ரூபாய் மதிப்பிலான 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கம் கடத்தல்கள் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் தங்கங்கள் அதிகமாக துபாய், சார்ஜா, குவைத், தென்னாபிரிகா, இலங்கை உட்பட வளைகுடா நாடுகளில் இருந்து அதிகமான தங்கங்கள் கடத்தப்பட்டுள்ளன. இதே போன்று சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, ரூ.10.97 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வெளிநாட்டு கரன்சி கடத்தல் சம்பவங்களில், பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த, 14 கோடி ரூபாய் மதிப்பிலான, 27.66 கிலோ, ஹெராயின், மெத்தகுலோன், கொகைன் ஆகிய போதைப் பொருட்களை சுங்கத்துறையினர் கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடந்த ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர வெளிநாடுகளில் இருந்து, டாமரின் குரங்குகள், மலைப்பாம்பு குட்டிகள், நரிக்குட்டிகள், விஷ தேள்கள், விஷ பாம்புகள், ஆமைகள் உட்பட 134 அரிய வகை வன விலங்குகள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை பெரும்பாலும் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து கடத்தப்பட்டுள்ளன. அனைத்து அரிய வகை உயிரினங்களும் எந்த நாட்டில் இருந்து வந்ததோ அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டன.
கடந்த ஓராண்டில் மட்டும் 124.88 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 70.12 கோடி மதிப்புடைய 157 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் அது ரூபாய் 94. 22 கோடி 205 கிலோவாக அதிகரித்துள்ளது.