freedom struggle fighter campaigning against corruption and bribery last 30 years

வேலூர்

முப்பது ஆண்டுகளாக ஊர், ஊராகச் சென்று ஊழலை எதிர்த்தும், தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வலியுறுத்தியும், லஞ்சம் கொடுக்காமல் இருப்பது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சிங்காரபேட்டையைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.மாசிலாமணி (93). இவர், "வெள்ளையனே வெளியேறு", "உப்பு சத்தியாகிரகம்" உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

தற்போது இவருக்கு தமிழக அரசு சுதந்திரப் போராட்ட தியாகிக்கான ஓய்வூதியம் அளித்து வருகிற நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் ஊழல், இலஞ்சம், வியாபார அரசியல், மாறிவரும் உணவுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு எதிராக இவர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் மக்களிடமும் அவர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, "தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் பணம் வாங்காமல் வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்,

லஞ்சம் கொடுத்து தங்களது வேலைகளை முடித்துக் கொள்வதைக் கைவிட வேண்டும்,

அரசு அலுவலகங்களில் காணப்படும் ஊழல்களை எதிர்க்க வேண்டும்,

உடல் நலத்தை கெடுக்கும் நவீன உணவுப் பழக்கத்திலிருந்து விடுபட்டு, தினை, கம்பு, ராகி போன்ற எளிய உணவுகளுக்கு மாற வேண்டும்" என்று கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து சுதந்திர போராட்ட தியாகி எஸ்.ஏ.மாசிலாமணி, "கடந்த 30 ஆண்டுகளாக ஊர், ஊராகச் சென்று இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

சிலர் இதனை காது கொடுத்துக் கேட்பர். பலரும் தட்டிக் கழித்துச் செல்லக்கூடும். ஆனால், எனது பிரச்சாரத்தால் ஊருக்கு ஒருவர் தன்னை திருத்திக் கொண்டாலும் அது எனக்கு வெற்றியே" என்று அவர் தெரிவித்தார்.