Fraud in Co-operative Society Election - PMK held in protest with cow
தருமபுரி
கூட்டுறவு சங்க தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி மாடுகளுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள நெருப்பூரில், "கூட்டுறவு சங்க தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், மனுக்களை முறையாக பரிசீலனை செய்யவில்லை" எனக் கூறியும் கடந்த 28-ஆம் தேதி பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், "பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துவிட்டு கலைந்தனர்.
இந்த நிலையில், நேற்று "கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகவும், தேர்தலை முறையாக நடத்த வேண்டும்" என்று கோரியும் நெருப்பூரில் பசு மாடுகளுடன் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மாடுகளின் கொம்புகளில் கருப்பு கொடி கட்டியும், பாலை சாலையில் கொட்டியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் (பொறுப்பு) தமிழரசன், துணை காவல் கண்காணிப்பாளர் அன்புராஜ் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானம் அடைந்த பா.ம.க.வினர் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
