Four years jail surviyor who bribe Rs.500 - Namakkal court action

நாமக்கல்

நிலத்தை அளந்து பட்டா மாறுதல் செய்ய ரூ.500 இலஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.

நாமக்கல் மாவட்டம், அருகே உள்ள துத்திக்குளத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (72). ஓய்வுப் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் தனது நிலத்தை அளவீடு செய்து, பட்டா மாறுதல் வழங்க வேண்டும் என்று காளப்பநாயக்கன்பட்டி நில அளவையர் சம்பத்குமார் (58) என்பவரிடம் மனு கொடுத்திருந்தார்.

அதற்கு, ரூ.500 இலஞ்சம் கேட்டுள்ளார் சர்வேயர். இலஞ்சம் தர விருப்பம் இல்லாததால் ராமசாமி, இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பின்னர், காவலாளர்களின் ஆலோசனைபடி கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி துத்திக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இரசாயன பொடி தடவிய, ரூ.500-ஐ சம்பத்குமாரிடம், ராமசாமி கொடுத்தார்.

அதனை மறைந்திருந்த பார்த்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் சம்பத்குமாரை கையும், களவுமாக பிடித்து அங்கேயே கைது செய்தனர்.

இந்த வழக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி. "குற்றம் சாட்டப்பட்ட நில அளவையர் சம்பத்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம்" விதித்து தீர்ப்பு அளித்தார்.

இதனையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பத்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.