திருநெல்வேலி

தென்காசியில் கள்ளத்தனமாக துப்பாகிகள் தயாரித்து வேட்டையாடுபவர்களுக்கு விற்றும், காட்டுவிலங்குகளை வேட்டையாடியும் வந்த நால்வரை காவலாளர்கள் வாகன சோதனையின்போது கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்கள் வேட்டையாட பயன்படுத்திய 7 துப்பாக்கிகள் மற்றும் 22 தோட்டாக்களை பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அனுமதியின்றி காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுகிறது என்று காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மேற்பார்வையில் அச்சன்புதூர் ஆய்வாளர் மீனாட்சிநாதன் மற்றும் காவலாளர்கள் அச்சன்புதூர் – காசிதர்மம் சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில், ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சியைச் சேர்ந்த ஆழ்வார் (36), தென்காசி அருகே உள்ள காசிதர்மம் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளிமுத்து (36), மேலகரத்தை சேர்ந்த குமாரசாமி (38), வடகரையைச் சேர்ந்த பீர்முகமது (47) ஆகியோர் இருந்தனர்.

அவர்களிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தியதில் அவர்கள் அளித்த பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் அவர்கள் வந்த காரை காவலாளர்கள் முழுவதுமாக சோதனை செய்தனர்.

அந்த சோதனையின்போது காரில் 7 துப்பாக்கிகளும், 22 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காவலாளர்கள் பறிமுதல் செய்ததுடன், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

காரில் அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அச்சன்புதூர் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து அவர்கள் நால்வரையும் கைது செய்தனர்.

கைதான நால்வரிடமும் காவலாளக்ரள் நடத்திய விசாரணையில், “ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சியைச் சேர்ந்த ஆழ்வாரின் தந்தை துரைச்சாமி புளியரையில் வசித்து வந்தார்.

அப்போது கள்ளத்தனமாக துப்பாக்கி தயாரித்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு துரைச்சாமி விற்று வந்துள்ளார். அப்போது ஆழ்வாரும், தந்தையுடன் சேர்ந்து “ஏர்கன்” உள்ளிட்ட பல்வேறு வகை துப்பாக்கிகளை தயாரித்துள்ளார்.

குறிப்பாக நாட்டு துப்பாக்கிகளை அதிகமாக தயாரித்து விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு விற்று வந்துள்ளார். காதர் ஷெரீப், காளிமுத்து, குமாரசாமி, பீர்முகமது உள்பட இன்னும் சிலரும் ஆழ்வாருக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

இவர்கள் கும்பலாக சேர்ந்து முயல், மான், மிளா உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதும், அதன் இறைச்சியை அதிக விலைக்கு விற்றுமுள்ளனர். மேலும் விலங்குகளின் தோலையும் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மான் வேட்டைக்கு சென்றுவிட்டு எதுவும் சிக்காமல் திரும்பி வந்தபோது காவலாளார்களிடம் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

தென்காசியைச் சேர்ந்த காதர் ஷெரீப்பை காவலாளர்கள் தேடி வருகின்றனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டதில் ஒரு துப்பாக்கி மட்டும் காவலாளர்களின் அனுமதிப் பெற்றது என்பது கொசுறு தகவல்.