100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடுகளை களைந்து, செயல்படுத்திட வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமையில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ராஜாசிதம்பரம், செல்லதுரை, ஜெயராமன், ஏ.கே.ராஜேந்திரன், இரூர் ராமராஜ், பூலாம்பாடி வரதராஜன், மாணிக்கம், பாடாலூர் சுந்தரம் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அவையாவன்:

“பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், கண்மாய்களை தூர்வாரி சீரமைத்து, மதகுகள், கலிங்குகளை மராமத்து செய்ய வேண்டும். ஏரிகளில் வரத்து வாய்க்கால்களை மராமத்து செய்ய வேண்டும். வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் தூர்வாரி சீரமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடு, ஒப்பந்தக்காரர் பெயர் விவரம், பணி தொடங்கும், முடிவடையும் காலம் குறித்த பெயர் பலகைகளை வேலை நடக்கும் இடங்களில் வைக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுடன் இணைத்து விவசாயிகள் பணபரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறட்சியால் வேளாண்மை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் 2015-16-ம் ஆண்டில் பெற்ற வங்கி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு வறட்சி நிவாரண உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்குகிறது. ஒரு ஏக்கருக்கு உழவு வேலைக்காக மட்டும் டிராக்டர் கருவிகளை பயன்படுத்த ரூ.3 ஆயிரம் செலவு ஆகிவிடுவதால், வறட்சி நிவாரணத்தொகையை ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசலூரில் சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பாடாலூரில் சல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களுக்கான முழுவட்டி தள்ளுபடிக்கான மானியம் ரூ.750 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு உரிய தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

கல்விக்கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியின் கோரப்பிடியால் பெரம்பலூர் மாவட்டத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடுகளை களைந்து, செயல்படுத்திடவேண்டும்.

காட்டாறுகள், ஓடைகளில் தடுப்பணைகளை நிறைய இடங்களில் கட்டாமல் சில இடங்களில் மட்டுமே கட்டினால் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கும். ஒரே பகுதியில் 6 அல்லது 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும். பெரம்பலூர் எறையூரில் உள்ள பொதுத்துறையின் கீழ் இயங்கும் நேரு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்பிற்கான நிலுவைத்தொகையை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வேண்டும். பிற ஆலைகளுக்கு கரும்பை அனுப்பி வைத்த வகையில் வழங்க வேண்டிய கரும்பு பாக்கித்தொகையை உடனே வழங்காவிட்டால், இனி கரும்பு விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு தங்களது கரும்பை அனுப்பி வைக்கும் நிலை ஏற்படும்.

பயிர்காப்பீட்டு திட்டத்தின்கீழ் பிரிமீயம் செலுத்தி உள்ள விவசாயிகளுக்கு 7 முறை சோதனைகளை நிலத்தில் நடத்திய பிறகே காப்பீட்டு தொகையை அனுமதிக்கின்றனர். இந்த சோதனைகளை தவிர்த்து பயிர்விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். பூலாம்பாடி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக மான்கள், மயில்கள் ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. அவற்றை தெருநாய்கள் துரத்துவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றை தவிர்க்க வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டிகளை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கைகளை வைத்தனர்.