கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில், கூண்டை பொளந்துகொண்டு தப்பிய சிறுத்தைப்புலியை பிடிக்க மீண்டும் கூண்டு வைத்துவிட்டு எட்டு நாள்களாக வனத்துறையினர் காத்திருக்கின்றனர். 

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருகே சீரியூர், பனப்பாளையம், மேடூர் தோகமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி ஒன்று இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. 

இரவு நேரத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்த இந்த சிறுத்தைப்புலி திடிரென பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. முன்பு இரவு நேரம் என்பதால் ஓரளவுக்கு அச்சமின்றி இருந்த மக்கள், பகல் நேரத்திலும் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் இருப்பதை கண்ணூடே பார்த்தபிறகு மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதனால் வனத்துறையினர் மேடூர், பனப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்களை பொருத்தினர். அப்போது பொம்மநாயக்கர் தோட்டப் பகுதியில் விஜயக்குமார் என்பவரின் ஆட்டை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்ற காட்சி  கண்காணிப்பு கேமராவில் தெள்ளத் தெளிவாக பதிவாகியிருந்தது. 

இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர். அங்கு விசாரித்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் கூடுதலாக இரண்டு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில்தான் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருக்கிறதா என்பதை எளிதில் அறிந்து கொண்டனர் வனத்துறையினர்.

அவர்கள் நினைத்தபடியே சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அந்தப் பகுதியில் இருப்பது உறுதியானது. அடுத்தது அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். 

அதன்படியே சிறுத்தைப்புலியை பிடிக்க பொம்மநாயக்கர் தோட்ட பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அதனுள் உயிருடன் ஒரு ஆட்டை கட்டி வைத்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உணவு தேடி வந்த சிறுத்தைப்புலி கூண்டுக்குள் நுழைந்து ஆட்டை அடித்து கொன்றது. 

அதன்பின்னர் கூண்டின் அடியில் இருந்த மரபலகையை உடைத்து கொண்டு சிறுத்தைப்புலி லாவகமாக தப்பி ஓடியது. சிறுத்தைப்புலி கூண்டை உடைத்து தப்பும் என்று சற்றும் எதிர்பாராத வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையறிந்த மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்தனர். 

இதனையடுத்து, "வனத்துறையினர் சிறுத்தைப்புலியை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் பீதியோடு கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தைப்புலி உடைத்த கூண்டையும் சரி செய்து அதில் ஆட்டையும், கோயம்புத்தூரில் இருந்து புதிதாக கூண்டு ஒன்றை வரவழைத்து அதில் நாயையும் கட்டி வைத்தனர். கூண்டை சுற்றியும் மரக்கிளைகளை போட்டனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 24 மணி நேரமும் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் சுரேஷ், வனக்காப்பாளர்கள் முனுசாமி, சகாதேவன், வனக்காவலர்கள், மற்றும் வேட்டை தடுப்பு காவலர் என 8 பேர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றோடு எட்டு நாட்கள் ஆகியும் சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கவில்லை. அந்த பகுதி மக்களும் அச்சத்தில் இருந்து மீளவில்லை. 

சிறுத்தைப்புலி வைக்கப்பட்டு இரண்டு கூண்டுகளில் எதாவது ஒன்றிலாவது வந்து சிக்கும் நாளுக்காக வனத்துறையினரும், மக்களும் காத்திருக்கின்றனர்.