foreign companies leave tamilnadu due to bribe
வெளிநாட்டு மூலதனமோ, தொழில் நிறுவனங்களோ நம் நாட்டிற்கு வந்தால், அதன் மூலம் இங்கு பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களின் வருவாயும் பணப்புழக்கம் அதிகரிக்கும். அத்துடன், அதை சார்ந்த உப தொழில்களும் வளர்ச்சி அடையும்.
அதன் காரணமாகவே, பிரதமர் தொடங்கி பல மாநில முதல்வர்களும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து, தங்கள் மாநிலத்திற்கு வந்து தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழ் நாட்டை பொறுத்த வரை, தொட்டதற்கெல்லாம் லஞ்சம் கேட்டு, அதிகாரிகள் கொடுத்து வரும் குடைச்சலால், வரவிருந்த தொழில் நிறுவங்களும் வேறு மாநிலங்களுக்கு சென்று விடுகின்றன.

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா, சென்னைக்கு அருகே, 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அள்வுக்கு பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்க முன்வந்தது.
ஆனால், மின் சலுகை, சாலை வசதி, நில விலையில் சலுகை உள்ளிட்டவற்றுக்காக, ஆட்சியாளர்கள் பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அதனால், அந்த திட்டத்தை கைவிட்டதாக கூறும் அந்நிறுவனம், அந்த தொழிற்சாலையை ஆந்திராவில் தொடங்க முடிவு செய்துள்ளது.
மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அக்கரையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.

அதே போல், திருநெல்வேலி, கங்கை கொண்டானில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வரவிருந்த "சின்டெல்" என்ற தொழிற்சாலையும், அதிகாரிகளுக்கு லஞ்சம் தர மறுத்ததால், கைவிட்டு போயுள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை சமாளிக்க, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசே, இப்படி நடந்து கொண்டால், இந்த பிரச்சினைக்கு யார்தான் தீர்வு காண்பது?.
ஏற்கனவே, சென்னையில் மூடப்பட்ட பி அண்ட் சி மில், ஸ்டேண்டர்டு மோட்டார்ஸ், அண்மையில் மூடப்பட்ட நோக்கியா போன்ற தொழிற்சாலைகளால், வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்கள் எத்தனை பேர்?, அவர்களின் வேதனை என்ன வென்று தெரியாத, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம், தமிழ் நாட்டை பின்னுக்கு தள்ளுமே ஒழிய முன்னேற்றம் அடைய செய்யாது.
