திண்டுக்கல்

பழனி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பசுமையை பரப்ப தொடர்ந்து 12 மணி நேரம் முயற்சி செய்து 40 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன. அவற்றை பழனி முழுவதும் வீசி பசுமையான பழனியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மூங்கில் பவுண்டேஷன், மக்கள் ஹெல்த் சென்டர் மற்றும் விழித்தெழு அறக்கட்டளை சார்பில், விதைப்பந்து தயாரிக்கும் குடும்ப விழா நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியை, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பாலசுப்ரமணியம் தொடங்கிவைத்தார். இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் கலந்து கொண்டனர்.     

இந்த நிகழ்ச்சியில், ஐந்து பங்கு மண், மூன்று பங்கு சாணம், இவற்றை ஈரமாக்க வேண்டிய அளவு தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு நன்கு பிசைந்து, அதற்குள் விதைகளை வைத்து உருட்டி வைத்து விதைப்பந்து தயார் செய்யப்பட்டது. காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.    

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசுமையை பரப்பும் விதமாக, இந்த விதைப்பந்தை தயாரித்து வருகிறோம் என்று விழித்தெழு அறக்கட்டளை ஹாரூன் பாஷா கூறினார்.

மூங்கில் பவுண்டேஷன் ரியாஸ் முகமது உசேன் கூறியது:

தமிழகத்தில் 16 சதவீதமாக உள்ள காடுகளை 40 சதவீதமாக உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தற்போதுள்ள விதைப் பந்துகளை பழனியில் இருந்து தாராபுரம், திண்டுக்கல், வரதமாநதி மற்றும் பாலசமுத்திரம் செல்லும் வழிகளில் வீசி எறிவதன் மூலமாக விதைகளை பரப்ப முடியும். இதனால் காடு செழிக்கும்.     

மேலும், இந்த விதைப் பந்தில் புளியமரம், வேப்பமரம், புங்கமரம் போன்றவற்றின் விதைகளை வைக்கிறோம். இவை, தமிழகத்தில் நிலவிவரும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது என்று கூறினார்.

தொடர்ந்து 12 மணி நேரம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, சுமார் 40 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.