உணவு தானம் செய்து பசி இல்லா உலகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் முயல வேண்டும் என்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் த.பரிமளதேவி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக கைகழுவுதல் தினம் மற்றும் உலக உணவு தினத்திற்கு த.பரிமளதேவி தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியது, “உலக அளவில் 9 பேரில் ஒருவர் என 805 மில்லியன் மக்கள் பசியோடு வாழ்ந்து வருகின்றனர். இதில் 60 சதவிகிதம் பேர் பெண்கள்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துவருகின்றனர்.
பசி இல்லாமல் வாழ்வதும், தேவையான அளவு உணவு உண்பதும் மனிதனின் அடிப்படை உரிமையாகும்.
இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சமையல் கூடம் இயங்கி வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் 150 உள்நோயாளிகளுக்கு உணவு தயார் செய்து சரிவிகித உணவு வழங்கப்படுகிறது.
எனவே, முடிந்தளவு உணவு தானம் செய்து பசி இல்லா உலகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் முயல வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியையொட்டி மருத்துவமனை சமையல் பணியாளராக 31 ஆண்டுகள் பணியாற்றி வரும் சற்குணராஜாவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் கை கழுவும் முறை குறித்து மருத்துவமனை பணியாளர்களுக்கு முதல்வர் மருத்துவர் பரிமளதேவி செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் செவிலியர் கண்காணிப்பாளர் மல்லிகா, சித்ரா ராஜகுமாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
