Following the warning of the judges withdraw the protest
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய பென்ஷன் முறையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகர் என்பவர், ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் நடைபெற்றால் போக்குவரத்து மருத்துவம், கல்வி உள்ளிட்டவை ஸ்தம்பித்து விடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் நிபந்தனைகளை முன் வைக்காமல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினால் வரும் தலைமைச் செயலரை நீதிமன்றத்துக்கே அழைத்து பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட தயார் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து, இன்று மதியம் 2 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெற்றதை அடுத்து, அமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படியும் நம்பிக்கையின் அடிப்படையிலும் அதனை ஏற்றுக் கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மதியம் 2 மணிக்கு பணிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
மேலும், நீதிபதியின் முன்னிலையில், தலைமை செயலாளரை நேரில் சந்தித்து எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்வதாகவும், எங்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் எங்கள் அமைப்புடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவெடுப்போம் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
