flower man died while watching jallikattu bull attacked 23 people were injured ...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடந்த சல்லிக்கட்டுப் போட்டியை வேடிக்கை பார்த்த பூ வியாபாரியை மாடு தனது கொம்பால், கழுத்தில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் 23 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூர் கிராமத்தில் பொங்கல் திருவிழாவையொட்டி சல்லிக்கட்டு நடத்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சில நாள்களாக சல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்கள் செய்துவந்தனர்.
தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி வாடிவாசலின் இருபுறமும் சல்லிக்கட்டு காளைகளை பிடிப்பவர்கள் தவிர மற்ற பார்வையாளர்கள் உள்ளே நுழைய முடியாதபடி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், மாடுபிடி வீரர்கள் காயமடையாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை தேங்காய் நார்கள் போடப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து நேற்று வடமலாப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் சல்லிக்கட்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைப்பெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு காளைகளின் உரிமையாளர்கள் காளைகளை அலங்கரித்து வாடிவாசலுக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து சல்லிக்கட்டு தொடங்கியது.
இதனை புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆட்சியர் கே.எம்.சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 195 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது அங்கு கூடிநின்ற மக்கள் விசில் அடித்தும், கை தட்டியும் உற்சாகப்படுத்தினர்.
இதில் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 485 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன.
இந்த நிலையில் வாடிவாசலில் இருந்து வெளியே சீறிப்பாய்ந்த காளை ஒன்று வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. அந்த காளை சில நிமிடங்கள் வரை களத்தில் மிரட்டியது. பின்னர் அங்கிருந்து சென்ற காளை பார்வையாளர்கள் கூட்டத்தில் திடீரென பாய்ந்தது.
இதில் புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ஜீவானந்தம் (42) கழுத்தை தனது கூரிய கொம்பால் குத்தி தூக்கியது. இதில் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே திருக்கோகர்ணம் காவலாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்துச் சென்று அந்த காளையை துரத்திவிட்டனர். பின்னர் ஜீவானந்தத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் பலத்த காயமடைந்த 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பாத்திரங்கள், வெள்ளிநாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், குத்துவிளக்கு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
சல்லிக்கட்டு போட்டியின்போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
