நீலகிரி

முதுமலையில் பெய்த வரும் தொடர் மழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் மீண்டும் அதிகரித்துள்ளதோடு முதுமலையும் புத்துயிர் பெற்றுள்ளது.

எழுபதுக்கும் மேற்பட்ட புலிகள், நூற்றுக்கணக்கான சிறுத்தைப்புலிகள், யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் கொண்ட முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

இங்கு வனவிலங்குகளுக்கு ஏற்ற காலநிலையும், பசுந்தீவனம், தண்ணீர் உள்ளதால் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் வருடா வருடம் கூடிக் கொண்டே வருகிறது. மேலும், முதுமலையை காண ஆண்டுதோறும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது பதிவு.

இந்தாண்டு கோடைக் காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் முதுமலை புலிகள் காப்பகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் வனப்பகுதியில் உள்ள 40–க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டதுடன், முக்கிய நீராதாரமாக விளங்கும் “மாயார்” ஆறும் தண்ணீரின்றி வறண்டது.

இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் குடிக்க தண்ணீரின்றி கடும் அவதிக்கு உள்ளாயின. அதனால் வனத்துறை சார்பாக கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்டது.

யாரும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வறட்சியால் வனத்துறையினர் விலங்குகளை காப்பாற்ற திக்கு முக்காடிய நிலையில் கடந்த சில நாள்களாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த வனப்பகுதி தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.

தொடர் மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளதுடன் “மாயார்” ஆற்றிலும் கரைபுரண்டு ஓடும் அளவிற்கு தண்ணீர் வந்துள்ளது. “மாயார்” ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த ஒடுவதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது, வனத்துறையினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மான்கள், காட்டு யானைகள், காட்டெருமைகள் போன்றவை கூட்டம், கூட்டமாக வனப்பகுதியில் திரிகின்றன.