Asianet News TamilAsianet News Tamil

ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... தயாராகும் நிவாரண முகாம்கள்...

Flood Risk Warning for People in the Outer Side ... Preparedness Relief Camps ...
Flood Risk Warning for People in the Outer Side ... Preparedness Relief Camps ...
Author
First Published Jun 12, 2018, 8:36 AM IST


தேனி 

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்  ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாவலர்களின் துணையின்றி ஆற்றங்கரையோர பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்கக்கூடாது.

மாவட்டத்தில் மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைத்திடவும், வெள்ளம் பாதிப்படைய வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 

நிவாரண முகாம்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்னெச்சரிக்கையாக செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெள்ளம் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

கால்நடை பாரமரிப்புத் துறையின் சார்பில் மழையின் காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயினை தடுத்திட தேவையான மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். 

நெடுஞ்சாலைத் துறையினர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் அவசர காலங்களில் பயன்படுத்த மாற்று சாலை வசதிகளையும் கண்டறிந்து வைத்திருக்க வேண்டும்.

மாவட்டத்தில் இயங்கும் 12 மழை மானி நிலையங்களை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். நீர்நிலை ஆதாரங்களில் உள்ள முட்செடிகளை அகற்றி வாய்க்கால்களில் தண்ணீர் விரைந்து வழிந்தோடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். 

அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மண்எண்ணெய், காலி சாக்கு பைகள் ஆகியவறை போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். தினசரி மழை அளவு, அணைகளில் நீர்மட்ட விவரம், கால்நடைகள், குடிசைகள், பயிர் மற்றும் உள் கட்டமைப்புகள் சேதம் குறித்து உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தினந்தோறும் காலை 8 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்குள்ளும் மழை அளவினை கணக்கிட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

வாக்கி டாக்கிகள் மூலம் அலுவலர்கள் வெள்ளம் பாதிப்புகள் குறித்த தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ள வேண்டும். சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட மர அறுவை கருவி, பொக்லைன் போன்ற எந்திரங்களை பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios