மதுரை

மதுரையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் ஒரே நாளில் விஷம் குடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நால்வர் மதிய உணவுக்கு பின்பு திடீரென வாந்தி எடுத்தனர். 

இதனைப் பார்த்து பதட்டமடைந்த ஆசிரியைகள், மாணவிகளிடம் விசாரித்துவிட்டு பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாணவிகள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மற்றொரு மாணவி, வீட்டில் மயங்கி கிடந்தாராம். அவரை பெற்றோர் விசாரித்தபோது விஷம் சாப்பிட்டது தெரியவந்தது. அவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

மாணவிகள்  ஐந்து பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை ஆட்சியர் வீரராகவராவ் நேரில் சென்று பார்த்து விசாரித்தார். பின்னர் மாணவிகளின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினார்.  மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். 

அப்போது மருத்துவ அதிகாரி பூமிநாதன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா, தாசில்தார் நாகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து ஆட்சியர், "மாணவிகள் ஐவரும் பல்வேறு காரணங்களால் விஷம் குடித்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மருத்துவத்துறை, மனோத்தத்துவம், சமூக நலத்துறை, கல்விதுறையின் மூலம் மாணவ - மாணவிகளுக்கு கவுன்சிலிங் தரப்படும்" என்று அவர் கூறினார்.