five over bridges for Thiruvallur - P.Venugopal MP demand to Nitin Gadkari

திருவள்ளூர்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், அந்தத் தொகுதியின் அதிமுக உறுப்பினரும், நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவருமான பி.வேணுகோபால் எம்.பி நேரில் சென்று மனு கொடுத்தார்.

மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை புது டெல்லியில் அவரது அலுவலகத்தில் திருவள்ளூர் தொகுதியின் அதிமுக உறுப்பினரும், நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவருமான டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி. நேரில் சந்தித்தார்.

அப்போது தனது தொகுதி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.
அதில், “திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 4-ல் உள்ள சென்னை - பெங்களூரு இடையிலான நசரத்பேட்டை சந்திப்பு, திருவேற்காடு சந்திப்பு ஆகியவற்றிலும், தேசிய நெடுஞ்சாலை எண் 5-ல் உள்ள சென்னை - கொல்கத்தா இடையிலான புழல் சந்திப்பு, திருவள்ளூர் பாலவாயல் இடையிலான செங்குன்றம் சந்திப்பு, ஜனப்பன் சத்திரம் சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வாகன எரிபொருளை சிக்கனப்படுத்தும் நோக்குடன் ஐந்து மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோன்று, பாதுகாப்புத் துறைச் செயலாளர் சஞ்சய் மித்ராவை நேரில் சந்தித்து வேணுகோபால் மனு அளித்தார். அதில், “திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பட்டாபிராம் - பட்டாபிராம் மேற்கு ரயில்வே நிலைய பகுதியில் ரயில்வே துறை ஆளுகைக்கு உள்பட்ட 1034 - 1035 கி.மீ இடையிலான பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதியை அளித்துள்ளது.

மேம்பால கட்டுமானப் பணி நடைபெற ஏதுவாக, அந்த வழியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றப்பட வேண்டும். ஆகவே, பட்டாபிராம் இந்திய உணவுக் கழகம் - முத்தாபுதுப்பேட்டை வழியாக அமைந்துள்ள திருவள்ளூர் - சென்னை சாலையில் பட்டாபிராம் ராணுவப் பகுதி சிஎம்ஏ குடியிருப்பு முதல் இந்திய உணவுக் கழகம் வரை அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

சேதமடைந்துள்ள அந்தச் சாலையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்புத் துறையின் அனுமதி தேவைப்படுகிறது. இதற்கான அனுமதியை வழங்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.வேணுகோபால் எம்.பி. நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

“பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் அமைந்துள்ள சென்னை - பெங்களூரு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரையிலான சாலைப் பகுதியை அகலப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அனைத்துக் கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார்.

அதேபோன்று, சாலை புதுப்பிப்பது தொடர்பான விஷயத்தில் அனுமதி வழங்கக் கோரி நான் அளித்த மனுவைப் பரீசிலித்து நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்புத் துறைச் செயலாளர் சஞ்சய் மித்ராவும் தெரிவித்தார்” என்று அவர் கூறினார்.