பெரம்பலூர்

பெரம்பலூரில் சரக்கு ஆட்டோ மோதி ஒரு குட்டி மான் உள்பட ஐந்து புள்ளி மான்கள் பலத்த காயத்தோடு பரிதாபமாக உயிரிழந்தன. மான்கள் மீது மோதிவிட்டு சரக்கு ஆட்டோ நிறுத்தாமல் சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர், ஐயனார்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் வாழ்கின்றன.

இவை குடிநீருக்காகவும், உணவுக்காகவும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு மற்றும் சாலைகளை கடந்துச் செல்வது வழக்கம். ஆனால், அந்த சமயங்களில் வெறிநாய்கள் கடித்தும், வாகனங்கள் மோதியும் பரிதாபமாக உயிரிழந்து வருவதும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.  

இந்த நிலையில் வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் வெங்கலம் சாலையில் நேற்று காலை மான் கூட்டம் ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத சரக்கு ஆட்டோ ஒன்று மான் கூட்டத்தில் வேகமாக மோதிவிட்டு வாகனத்தை நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், புள்ளி மான் இனத்தைச் சேர்ந்த ஒரு குட்டி மான், இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் மான்கள் பலத்த காயத்தோடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதுகுறித்து தகவலறிந்த, வனத்துறையினர் அங்குச் சென்று இறந்து கிடந்த மான்களை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை நடத்தியபின்பு வனப்பகுதியில் புதைத்தனர்.