Asianet News TamilAsianet News Tamil

மீனவர்கள் மீட்பு... உண்மை நிலை என்ன...? கடற்படை அதிகாரிகள் விளக்கம்! 

fishermen rescued from lakshadweep gujrat karnataka coastal guards explains
fishermen rescued from lakshadweep gujrat karnataka coastal guards explains
Author
First Published Dec 8, 2017, 8:54 PM IST


ஓக்ஹி புயல் காரணமாக, குமரி மாவட்டத்தின் பல இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குமரி மாவட்ட மீனவர்கள், கேரள மீனவர்கள் என பலர்  காணாமல் போயினர். 

இதனிடையே, கடற்படையினர் எந்த விதமான உதவிகளும் செய்யவில்லை என்று கூறி குமரி மாவட்ட பாதிரியார்கள் சிலர்,  மீனவர்களை திரட்டி போராட்டங்களை நடத்த வைத்தனர். இந்த  நிலையில், உண்மை நிலை என்ன என்பது குறித்து கடற்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுவரை 268 தமிழக மீனவர்கள் உள்பட 622 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 625 கி.மீ., தொலைவு வரை கடலில் சென்று மீனவர்களைத் தேடி வருகிறோம். 21 கப்பல், 5 விமானம், 1 ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இலங்கை, மாலத்தீவுகளிலும் மீனவர்கள் வந்துள்ளார்களா என விசாரித்துள்ளோம். மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படையின் 12 போர்க் கப்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. மீனவர்கள் மீட்கப்படும் வரை தேடுதல் பணி தொடரும் என்று கூறியுள்ளனர். 

ஓக்ஹி புயல் வீசிய நேரத்தில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே லட்சத்தீவு கடற்பகுதியில் 17 படகுகளில் தத்தளித்த 180 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவு கடற்பகுதியில் 17 படகுகளில் சுமார் 180 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை கடற்படையினர் கண்டுபிடித்து, அவர்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். குஜராத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீனவர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். லட்சத்தீவு, கோவா, கர்நாடகா, மராட்டியம் மற்றும் குஜராத் கடற்பகுதியில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios