Fishermen plan siege the legislature Will Tamil Nadu government take action?

இராமநாதபுரம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சட்டப்பேரவையை முற்றுகையிட முடிவெடுத்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களில் இராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 125 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 178 விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் நேற்று 2-வது நாளாகதொடர்ந்தது. இந்த வேலை நிறுத்த போரட்டம் காரணமாக இராமேசுவரம் துறைமுகத்தில் 850- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்தில் 8000 மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் ரூ. 2 கோடி அளவிலான ஏற்றுமதி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவ சங்கத்தலைவர் தேவதாஸ், "இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ஆறு மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறோம்.

வரும் 16-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அப்போதும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.