கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் சிறப்பு திருப்பலி நடத்தியும், மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்தும், கடல் நன்றி செலுத்தியும் உலக மீனவர் தினத்தை கொண்டாடினர்.
வருடா வருடம் நவம்பர் மாதம் 21–ஆம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது.
செய்யும் தொழிலே தெய்வம் என்பது போல, தொழிலுக்கு உதவும் உபகரணங்களும், மூலதாரமாக இருக்கும் கடலுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மீனவர்களும், அவர்களது குடும்பத்தாரும் இந்த தினத்தை கொண்டாடுகின்றனர்.
கடற்கரை கிராமங்களில் உள்ள ஆலயங்களில் அதிகாலையில் சிறப்பு திருப்பலி நடத்தினர். பின்னர் அருட்பணியாளர்கள் தலைமையில் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளங்கள், கட்டுமரங்கள், படகுகள் மீதும், கடலுக்கும் மலர் தூவி தங்களது மரியாதையைச் செலுத்தினர்.
மீன்பிடி உபகரணங்கள் மீது அருட்பணியாளர்கள் புனித நீர் தெளித்து, அர்ச்சித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில், குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குதந்தை எட்வின், குளச்சல் வட்டார குருகுல முதல்வர் செர்வாசியூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காணிக்கை மாதா ஆலய நிர்வாகிகள், துறைமுக நடவடிக்கை குழுவினர், விசைப்படகு சங்கத்தினர், வியாபாரிகள், ஏலக்காரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்திலும், அருட்பணியாளர் கிளிட்டஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
அதனைத் தொடர்ந்து, பங்குமக்கள் ஊர்வலமாக கடற்கரைக்குச் சென்று படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
பள்ளம் தூய மத்தேயு ஆலயத்தில் அருட்பணியாளர் ஜான்சன் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் மீன்பிடி உபகரணங்கள் அர்ச்சிக்கப்பட்டன.
இதுபோல், கன்னியாகுமரி, முட்டம், இனயம், முள்ளூர்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அர்ச்சிப்பு போன்றவை நடந்தன.
பின்னர், மீனவர்கள் தாங்கள் உபயோகிக்கும் உபகரணங்கள், படகுகள் போன்றவற்றை தொட்டுக் கும்மிட்டு தங்களது நன்றியைச் செலுத்தினர்.
