தேனி

தேனி மாவட்டத்திற்கு முதன்முதலாக பெண் ஆட்சியராக ம.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்றுக் கொண்டார். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ந.வெங்கடாசலம், பிற்பட்டோர் நலத் துறை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலாக, தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ம.பல்லவி பல்தேவ் (39) நியமிக்கப்பட்டார். அதன்படி, அவர் நேற்று காலை 11.30  மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரான ம.பல்லவி பல்தேவ் 2008 - 2009 அணியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2010 - 2011-ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்ட சார்-ஆட்சியராகவும், 2012 முதல் 2015-ஆம் ஆண்டு வரை கோவை வணிகவரித் துறை அமலாக்கப் பிரிவு இணை ஆணையராகவும், 2016-ஆம் ஆண்டு முதல் சென்னை வணிக வரித் துறை அமலாக்கப் பிரிவு இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆட்சியராகப் பொறுப்பேற்றபின், அவர் செய்தியாளர்களிடம்,. "மாவட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்விப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவேன். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட மாவட்டமாக உள்ளதால், விவசாயத்துக்கான வளங்களைப் பாதுகாக்கவும், புதிய தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.