first time a rare species of birds came forest department happy...
திருப்பூர்
திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்திற்கு முதல் முறையாக அரியவகை பறவை இனமான ‘நீலகண்ட சோலைபாடி’ பறவைகள் வந்துள்ளதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் மாவட்ட வனத்துறை சார்பில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இதன்படி திருப்பூரை அடுத்த சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளம், குண்டடம் பகுதியில் உள்ள உப்பாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 2018-ம் ஆண்டிற்கான நீர் புலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது.
இதற்கு திருப்பூர் மாவட்ட வன அதிகாரி முகமது ஷபாப் தலைமைத் தாங்கினார். திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், செயலாளர் ராம்குமார் மற்றும் உறுப்பினர்கள் வனத்துறையினருடன் இணைந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் நஞ்சராயன் குளத்தில் 69 வகை பறவைகளும், குண்டடம் உப்பாறு அணையின் நீர்ப்பரப்பு பகுதியில் 52 பறவை வகைகளும் கண்டறியப்பட்டது.
இதில், மிக முக்கியமான பட்டை தலை வாத்து, தட்டைவாயன், நீலச்சிறகு வாத்து, ஊசிவால் வாத்து, கிளுவை, மண்கொத்திகள், சிறு கொசு உள்ளான், சின்ன பட்டாணி, உப்புக்கொத்தி போன்ற பறவைகள் வெளிநாட்டில் இருந்து வந்த மிக அரிய பறவையினங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி கூழைக்கிடா, வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, சின்ன முக்குளிப்பான், நாமக்கோழி, சாம்பல் நாரை, செந்நீல நாரை, பாம்புதாரா, நீர்காகம் போன்ற உள்நாட்டு பறவைகளும் இந்த குளத்திற்கு வந்துள்ளது.
தொலைநோக்கியின் மூலம் கணக்கெடுக்கப்பட்டதில் நஞ்சராயன் குளத்திற்கு ‘நீலகண்ட சோலைபாடி’ என்ற பறவையினம் முதல் முறையாக வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பறவை இனங்கள் சாதாரணமாக, கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் அதிக அளவில் வாழக்கூடிய பறவை இனம் ஆகும்.
இந்த அரிய வகை பறவையான நீலகண்ட சோலைபாடி பறவையினத்தின் வருகை வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை பறவைகள் வரவு குளத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின் போது, உடுமலை வனவர்கள் முருகானந்தம், கோபிநாத் மற்றும் பிரதிபா, அமராவதி ஆகியோர் உடனிருந்தனர்.
