ஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மரத்திலேயே தலைகீழாக தொங்கியபடி தொழிலாளி உயிரிழந்தார். அவரது உடலை மீட்பதில் தீயணைப்புத்துறையினர் வெகு அலட்சியாக செயல்பட்டதாக பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை கணேசன் என்ற தொழிலாளி பதநீர் தொழிலை செய்து வருகிறார். வழக்கம் போல பதநீர் இறக்குவதற்காக அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரத்தின் மீது தலைகீழாக தொங்கியபடியே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புதுறை மற்றும் போலீசாருக்கும் உடனே தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் உயிரிழந்த கணேசனை எப்படி இறக்குவது தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு மரத்தை உலுக்கினர். இதில் மேலே தலைகீழாகத் தொங்கியவரின் உடல் மரத்தின் மீது வேகமாக மோதி கீழே இரக்கச் செய்தனர்.

 

பின்னர் தீயணைப்புத்துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டு தொழிலாளியின் உடலை மீட்டதாக உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர். ஆனால் தீயணைப்புத்துறையினர் சார்பில் மரத்தின் மீது தீயணைப்புத்துறை வீரர்கள் ஏறியிருந்தால், எடை தாங்காமல் ஏறியவருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், அதிக உயரம் கொண்ட ஏணி ஊத்தங்கரை அல்லது அருகிலுள்ள போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையங்களின் வசம் இல்லை எனவும் தீயணைப்புத்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.