சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அலுவலக பொருட்கள் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்தன.

சென்னை, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் ஜேஜே டவர்ஸ் உள்ளது. 9 மாடி கொண்ட இந்த கட்டடத்தில் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த கட்டடத்தின் 8-வது மாடியில் சுற்றுலா மற்றும் விசா ஏற்பாடு செய்து கொடுக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றியது. 

தீ விபத்தை அடுத்து, அருகில் இருந்தோர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துணையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில், அலுவலகத்தில் இருந்த மேசைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.