Finance businessman suicide Disappointment in frustration of interest money not return

திருப்பூர்

திருப்பூரில் வட்டிக்கு விட்ட 8 இலட்ச ரூபாய் பணம் திரும்ப வசூலாகாததால் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன் கோட்டை அத்திக்கொம்பை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் பிரவீன் குமார் (27). இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலும், தின வட்டி வசூல், வார வட்டி வசூல், மாத வட்டி வசூல் என தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில், வட்டிக்குவிட்ட பணத்தில் ரூ.8 இலட்சம் வசூலாகவில்லையாம். இதனால் நண்பர்களிடம் வாங்கிய பணத்திற்கு பதில் சொல்ல முடியாமல் மனமுடைந்து காணப்பட்டார் பிரவீன் குமார். 

அது மட்டுமல்லாமல் நண்பர்களிடம் வாங்கிய பணத்தை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களுக்கு பிரவீன் குமார் சென்று வட்டியை வசூல் செய்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர், இரவு உணவை சாப்பிட்டுவிட்டு கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்கச் சென்றுவிட்டார். 

பின்னர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் பிரவீன் குமார் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பிரவீன் குமார் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக வீட்டினுள் எட்டிப்பார்த்தனர். அப்போது வீட்டினுள் பிரவீன் குமார் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தாராபுரம் காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலாளர்கள் விரைந்து சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். 

பின்னர் அங்கு வீட்டினுள் சடலமாக தொங்கிய பிரவீன் குமார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.