திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதிலாக புதிதாக 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த 8–ஆம் தேதி அறிவித்தார் மோடி.
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. அதற்கான காலக்கெடு நிறைவுப் பெற்றதை தொடர்ந்து, தற்போது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்வதற்கு மட்டும் பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு வருகின்றன.
மேலும் வங்கிகளில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டு வந்தன. ஏ.டி.எம். மையங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகளே எடுக்க முடிகிறது. இதனால் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் அல்லல் படுகின்றனர். சில்லறை தட்டுப்பாடு காரணமாக 100 ரூபாய் நோட்டுகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. 100 நோட்டுகள் பதுக்கல்களும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவை அரசாங்கத்திற்கு தெரியவில்லையா? அல்லது கண்டுக் கொள்ளவில்லையா என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு, விமானம் மூலம் வந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னையில் ரிசர்வ் வங்கியில் நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து படிப்படியாக மாநிலம் முழுவதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒருசில வங்கிகளுக்கு மட்டுமே புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தன.
இதைத் தொடர்ந்து அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர். அவற்றை மக்கள் வாங்கிச் சென்றனர். அதேநேரம் ஒருசில வங்கிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படவில்லை. அந்த வங்கிகளில் இன்று (புதன்கிழமை) அல்லது நாளைக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏ.டி.எம். மையங்களில் ஒருசில நாட்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதன்மூலம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்து விடும் என்றும் சில்லறை தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என்றும் நம்பப்படுகிறது.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடந்தன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பணம் வைக்கப்பட்ட ஏ.டி.எம். மையங்கள் கூட பணம் வைக்கப்படாமல் பூட்டியேக் கிடந்தது. இதனால் மக்கள் பணம் எடுப்பதற்கு வங்கிகளை தேடி அலைகின்றனர். பல வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதினாலும், ஏ.டி.எம்களிலும் கூட்டம் நிரம்புகிறது.
இதுஒருபுறம் இருக்க வங்கிகளில் பணம் எடுப்பதற்கான அளவு தளர்த்தப்பட்டது. ஆனால், ஏ.டி.எம். மையங்களில் முதலில் தினமும் ரூ.2000 ஆயிரம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ரூ.2500 எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஏ.டி.எம். மையங்களில் ரூ.2000 மட்டுமே எடுக்க முடிகிறது.
இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, “இப்போதும், பணம் எடுப்பதற்கு வங்கிகளையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கான அளவை உயர்த்த வேண்டும். அவ்வாறு ஏ.டி.எம். மையங்களில் தற்போதைய அளவை விட கூடுதல் தொகை கிடைத்தால், வங்கிகளில் கூட்டம் குறையும்” என்று அவர்கள் கூறினர்.
