அரியலூர்

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,

விவசாயிகள் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்.

தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 36 நாள்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நடத்தும் போராட்டங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகளிம் துயரத்தை நமக்கு காட்டுகிறது. வெயில், குளிர் பாராது இத்தனை நாள்களாக இவர்கள் போராட்டம் நடத்தியும், மத்திய மோடி அரசு இவர்களுக்கு செவி சாய்க்கவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விசயம்.

இவர்களது, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரியலூர் அண்ணாசிலை அருகே சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் ஆகியோர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் அரங்கநாடன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர்கள் சங்கர், தங்க.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,

விசாயிகளின் நலனை மேம்படுத்த மாவட்டம் தோறும் ஆணையம் அமைக்க வேண்டும்.

கிராம ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளை தூர்வார வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.