Asianet News TamilAsianet News Tamil

மறுக்கப்பட்ட உரிமைக்காக இப்படியும் போராடுவோம்…

fight for-the-right-way
Author
First Published Jan 3, 2017, 10:08 AM IST


கம்பம்,

கம்பத்தில், பழங்குடியினர் வகுப்பில் இருந்தவர்களுக்கு திடீரென பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்படாததால் தங்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி தலைப்பாகை அணிந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கம்பத்தில் வசிக்கும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழை மத்திய, மாநில அரசு வழங்கவில்லை. இதனால், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு பழங்குடியினருக்கான அடிப்படை உரிமைகள் வழங்காமல் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கம்பம் வடக்குபட்டி, தேவர்புரம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தலைப்பாகை அணிந்து அரசு கள்ளர் பள்ளி அருகில் கூடினர்.

பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக கம்பம்மெட்டு சாலை வழியாக தலைமை தபால் நிலையம் நோக்கி வந்தனர். இந்த சாலை வழியாகதான் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப அடியார்களின் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்திற்கு சீர்மரபினர் நலச்சங்கத்தின் வழக்கறிஞர் பிரிவின் மாநில துணை செயலாளர் கௌதமன் தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து தபால் நிலைய அதிகாரி மோகனிடம் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர்.

தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios