கன்னியாகுமரி

தொடர்ந்து ஐந்தாவது நாளாக கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்றவற்றை பார்ப்பதில் ஆர்வம் காட்டுவர்.

அதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவையினை இயக்கி வருகிறது. இதற்காக காலை 8 மணி முதல் 4 மணி வரை மூன்று படகுகள் இயக்கப்படுகின்றன.

கடல் நீர் மட்டம் குறைவு, சூறைக் காற்று, கடல் சீற்றம் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் படகு சேவை தடைபடுவதால் பெரும்பாலான நாள்களில் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாள்களாக கடல் சீற்றம் மற்றும் மழை காரணமாக படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் காலை 8 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நாள் முழுக்க படகு சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம், சூரிய மறைவு போன்றவற்றை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.