Female suicide attempt
கந்து வட்டி கொடுமையால், சென்னையில் பெண் ஒருவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் தீக்குளித்தனர்.
70 சதவீதத்துக்கும் மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார். இந்த நிலையில், தீக்குளித்து இறந்த தாய் மற்றும் 2 மகள்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
ஈரோட்டில், கடனை திருப்பி அடைக்க முடியாததால், நிர்பந்தப்படுத்த கிட்னி பெற முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவர் கேரளாவில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கந்து வட்டி கொடுமை காரணமாக சென்னையில், அமுலு என்ற பெண் ஒருவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் அமுலு (30). இவர் கலா என்பவரிடம் கந்த வட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. பணம் திருப்பி அடைக்க முடியாத சூழ்நிலையில், அமுலுக்கு கலார் அழுத்தம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அமுலு, கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அமுலுவை மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அமுலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
