தர்மபுரி,
ஆதார் பதிவிற்கு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:
“தர்மபுரி மாவட்டத்தில் நிரந்தர சேவை மையங்களில் “ஆதார் சேர்க்கை பணி” நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் புதிய ஆதார் பதிவிற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இது கட்டணமில்லா சேவை.
இந்த நிலையில் சிலர் விரைவாக ஆதார் எண் பெற்று தருவதாக கூறி ஆதார் பதிவிற்கு வரும் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
ஆதார் பதிவிற்கு பணம் கேட்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஆதார் எண்ணை பெற மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள நிரந்தர மையங்களை நேரில் அணுகி பதிவு செய்து ஆதார் அட்டைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
ஆதார் பதிவிற்கு யாராவது பணம் கேட்டால் அது குறித்து அந்த அலுவலகங்களில் புகார் தெரிவிக்கலாம்” என்றுத் தெரிவித்தார்.
