செய்யாறு,

செய்யாறு அருகே சொத்துக்காக தந்தையைக் கொலைச் செய்துவிட்டு, பொதுமக்கள் மத்தியில் ஒன்றும் தெரியாததுபோல நீலிக் கண்ணீர்விட்டு  அழுது நடித்த மகனை காவலாளர்கள் கைது செய்தனர்.

செய்யாறு நகர பகுதி வெங்கட்ராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி விட்டது

கடந்த 31-ஆம் தேதி அவரது நிலத்தில் கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் கொலைச் செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை குறித்துச் செய்யாறு காவல் கண்காணிப்பாளர் எம்.பி.திவ்யா மற்றும் செய்யாறு காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தினர்.

மின்மோட்டார் கம்பிகள் அறுந்து கிடந்ததால் அதனை திருட வந்தவர்கள் ஆறுமுகத்தை கொலை செய்திருக்கலாம் என முதலில் எண்ணப்பட்டது..

கொலைச் செய்யப்பட்ட ஆறுமுகம் பயன்படுத்திய செல்லிடப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவரிடம் மகன் மணிவண்ணன் பேசியது தெரிந்தது.

இதனையடுத்து குடும்பத்தினரிடம் விசாரித்தபோது “ஆறுமுகம் தனது மகள்கள் மீது அதிக பாசம் வைத்திருந்தார். சொத்துகளை விற்று பணத்தை மகள்களுக்கு கொடுக்கப்போவதாக மகன் மணிவண்ணனிடம் கூறியிருந்தார். இதனால் தந்தை மீது மணிவண்ணன் ஆத்திரம் அடைந்த நிலையில் இருந்துள்ளார்” என்ற தகவல் வெளிவந்தது.

எனவே, இந்த கொலையில் ஆறுமுகத்தின் மகன் மணிவண்ணன் மீது காவலாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து விசாரித்தபோது தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

“தந்தை ஆறுமுகம் அவரது சொத்துகளை விற்று பணத்தை மகள்களுக்கு கொடுக்கப்போவதாக கூறினார். ஆறுமுகம் உயிருடன் இருந்தால் தானே சொத்துகளை விற்றுப் பணத்தை மகள்களுக்கு தரமுடியும், தந்தையை கொன்றுவிட்டால் சொத்து தனக்கு வந்து சேர்ந்து விடும் என மணிவண்ணன் திட்டம் போட்டுள்ளார்.

இந்த திட்டத்தை பெருங்களத்தூர் கிராமத்தில் வசிக்கும் நண்பர் சிவக்குமாரிடம் கூறியுள்ளார். சம்பவத்தன்று ஆறுமுகம் தனியாக நிலத்திற்கு செல்வதை நோட்டமிட்ட அவர் நண்பர் சிவக்குமாருக்கு தெரிவித்து வரவழைத்தார்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று நிலத்தின் அருகே நிறுத்திவிட்டு தந்தை ஆறுமுகத்தை கொலை செய்ய சிவக்குமாரை அனுப்பியுள்ளார்.

ஆறுமுகத்தை பின்தொடர்ந்து சென்ற சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார்.

பின்னர், திருட்டுச் சம்பவம் நடந்தது போல மின்மோட்டார் கம்பிகளை அறுத்துவிட்டு கொலைச் செய்யப் பயன்படுத்திய கத்தி மற்றும் கையுறையை செய்யாறு ஆற்றுப் படுகையில் இருவரும் வீசியுள்ளனர்.

காவலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை திசைத்திருப்ப சம்பவ இடத்தில் காவலாளர்கள் விசாரணை செய்யும்போது பொதுமக்களுடன் தானும் ஒண்ணும் தெரியாதது போல மணிவண்ணன் இறந்து கிடந்த தந்தை ஆறுமுகம் முன்பு கதறி அழுதுள்ளார்.

காவளாலர்களிடம் தந்தையைப் பற்றிய விவரத்தை எந்தவித பதட்டமும் இல்லாமல் கூறி தன் மீது சந்தேகம் வராத வகையில் நாடகம் ஆடியுள்ளார்.

ஆறுமுகத்தின் செல்லிடப்பேசி அழைப்பை ஆய்வு செய்தபோதுதான் மகனே நண்பரை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர் சிவக்குமாரை செய்யாறு காவலாளர்கள் கைது செய்தனர்.