சொத்து பிரச்சனை காரணமாக தனது மகள் ரம்யாவை, தனது மாமனாரும், திரைப்பட ஸ்டன்ட் கலைஞருமான ரத்தினமும், அவரது மகனும் கொலை செய்ததாக காவல் ஆய்வாளர் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் கூறியுள்ளார். சென்னை, சௌகார்பேட்டையைச் சேர்ந்த காவல் சிறப்பு ஆய்வாளர் துளசிங்கம். இவர், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் காவல் சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். 

இவரது மகள் ரம்யா, நுங்கம்பாக்கம் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நேற்று இவர், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, மினி வேன் ஒன்று மோதி படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, வேன் ஓட்டுநனர் பழனி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

தனது மகள் சாவுக்கு, சொத்து பிரச்சனைதான் காரணம் என்று கூறியுள்ளார். தனது மாமனாரான திரைப்பட ஸ்டன்ட் கலைஞர் ரத்தினமும், அவரது மகன் எத்திராஜும் சேர்ந்து தன் மகளை ஆள் வைத்து, வாகனத்தை ஏற்றி கொலை செய்துள்ளதாக போலீசில் புகார் கூறியுள்ளார். தனது மகள் ரம்யா, தாத்தா வீட்டிலேயே வசித்து வந்த நிலையில், சொத்து விவகாரம் காரணமாக அங்கிருந்து அவரை விரட்ட முயற்சித்தனர். 

இதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே என் மகள் ரம்யாவை, கொலை செய்து விட்டார்கள் என்று கூறினார். என் மகள் கொலைக்கு அவரது மாமனாரும், மகனும்தான் காரணம் என்றும், வீட்டை காலி செய்ய சொல்லித்தான் இந்த கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் ஆய்வாளர் துளசிங்கம் கண்ணீருடன் கூறினார்.