Asianet News TamilAsianet News Tamil

காணாமல்போன மருமகளை கண்டுபிடித்து தருமாறு மாமனார், மாமியார் ஆட்சியரிடத்தில் மனு…

Father and mother in law gave petition to find their daughter in law
Father and mother in law gave petition to find their daughter in law
Author
First Published Oct 10, 2017, 6:32 AM IST


பெரம்பலூர்

சில மாதங்களுக்கு முன்பு சந்தைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மருமகள் வீடு திரும்பாததால் அவரை கண்டுப்பிடித்து தருமாறு மாமனார், மாமியார் ஆட்சியரிடத்தில் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமை வகித்தார்.

இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நேரடியாக ஆட்சியரிடம் 283 மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரருக்கு உறுதியளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகியோர் தங்களது பேரக்குழந்தைகளுடன் ஆட்சியரிடத்தில் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், “எனது மருமகள் துர்கா (23) கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. துர்காவை பார்க்காததால் அவரது குழந்தைகள் தினமும் அழுது கொண்டே இருக்கின்றனர்.

எனவே, எங்களது மருமகளை கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை நடுத்தெருவைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் தனது மகன், மகளுடன் உறவினர்களை அழைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில், “எனது கணவர் செங்கமலை. துபாயில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் செங்கமலை இறந்துவிட்டதாக அவருடன் வேலை பார்க்கும் சகஊழியர்கள் எங்கள் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தனர்.

எனது கணவர் இறந்த சம்பவம் கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். எனது மகன் 11-ஆம் வகுப்பும், மகள் 6-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஏழ்மையான குடும்பம் என்பதால் எனது கணவரின் உடலை எப்படி சொந்த ஊருக்கு கொண்டு வருவது என தெரியவில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுத்து துபாயில் இறந்த எனது கணவரின் உடலை மீட்டுச் சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios