Fasting with family in the government Dissatisfied with jewelry thrown by jewelry
இராமநாதபுரம்
வீட்டில் நகைகளை திருடியவரைய் பிடித்துக் கொடுத்தும் நகையை கண்டுபிடிக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியரகத்தில் ஐந்து பேர் அடங்கிய குடும்பத்தினர் சாகும்வரை உண்ணாவிரதத்தில் மேற்கொள்ள முயன்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உடையநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது குடும்பத்தினருடன் ஆட்சியரகத்தில் அமர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துவிட்டு, "கடந்த 14.11.2017 ஆம் தேதி பூட்டியிருந்த என் வீட்டின் கதவுகளை உடைத்து வீட்டிலிருந்த 23 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக என் மனைவி ஆறுமுகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் 23 சவரன் நகைகளுக்கு பதிலாக 13 சவரன் எனக் குறைவாக வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், வீட்டில் திருடிய இளைஞரை அடையாளம் கண்டு அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் எந்த விசாரணையும் நடத்தாமல் அனுப்பி வைத்து விட்டனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு எனது பிள்ளைகளின் கல்வியும், என் மனைவியின் உடல் நலமும் வெகுவாகப் பாதித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 8.12.2017 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தேன். அதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்" என்று கூறினார்.
பின்னர், தனிப்படை அமைத்து திருடிய இளைஞரைப் பிடிக்கவும், திருடு போன நகைகளை மீட்டுத் தருவதாகவும் மாவட்ட கண்காணிப்பாளர் உறுதியளித்தைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்றார்.
