திருச்சி

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3500 நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் ராஜாமணி தலைமை வகித்தார். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வாடிய கரும்பு தோகைகளை கையில் ஏந்தியவாறு ஆட்சியரிடம் காட்டி முறையிட்டனர்.

அப்போது, “கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3500 என அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

தண்ணீர் இல்லாமல் திருச்சி மாவட்டம் முழுவதும் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் காய்ந்து வாடியுள்ளது” என்றனர்.

அதற்கு ஆட்சியர், “கூடுதலாக கொள்முதல் விலையை நிர்ணயிக்க முதலமைச்சர் தலைமையில் நடக்கும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.