திருச்சி 

கடைமடை மற்றும் ஏரிகளுக்கு உடனே தண்ணீர் திறந்திவிட வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது. 

trichy railway station க்கான பட முடிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆட்சியர் ராஜாமணி காரில் வந்திறங்கினார். அப்போது, அவரை ஏராளமான விவசாயிகள் முற்றுகையிட்டனர். இந்த முற்றுகைக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விசுவநாதன் தலைமைத் தாங்கினார். 

முற்றுகையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் திடிரென சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு அரைநிர்வாணமாக அலுவலக வளாகத்தின் படிக்கட்டில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.

trichy collector க்கான பட முடிவு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆட்சியர் ராஜாமணி, "எதற்காக இந்தப் போராட்டம்? என்று கேட்டதற்கு விவசாயிகள், "விதை நெல் வாங்கி விட்டோம். வாய்க்காலில் கடைமடைவரை காவிரி தண்ணீர் வராததால் நாற்றுப்போட முடியவில்லை. ஏரிகளிலும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் இல்லை. ஆனால், கொள்ளிடத்தில் இருந்து மட்டும் உபரியாக தண்ணீர் கடலில் கலக்கிறது. எனவே, வாய்க்கால் மற்றும் ஏரிகளில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும்" என்று கூறினர்.

அதற்கு ஆட்சியர், "இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்று கூறிவிட்டு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளே சென்றார். ஆனாலும், விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை. "கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும்வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்" என்று முழக்கமிட்டனர். பின்னர் போராட்டத்தைக் கைவிட்டு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.