Farmers road block cotton went low price in bid

நாமக்கல்

நாமக்கல்லில், வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை ஏலம் கேட்டதால் விவசாயிகள் ஏலத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் கௌண்டம்பாளையம் பவர் அவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். மைதானத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பருத்தி ஏலம் திங்கட்கிழமைதோறும் நடைப்பெற்று வருகிறது.

நேற்று நடந்த ஏலத்திற்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் 8000-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.

இந்தப் பருத்தி ஏலத்திற்கு வழக்கத்திற்கு மாறாக 5, 6 வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனராம். பருத்தி ஏலம் தொடங்கியதும் வியாபாரிகள் கடந்த வாரத்தைவிட நேற்று நடந்த ஏலத்தில் 1 கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்த விலைக்குக் கேட்டுள்ளனர்.

வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை ஏலம் கேட்டதால் விவசாயிகள் ஏலத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் ஏலத்தை புறக்கணித்து மாலை 4.15 மணிக்கு கௌண்டம்பாளையம் அருகேயுள்ள இராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் வி.ஐ.பி.நகர் பிரிவு சாலை இணையும் இடத்தில் திடீரென சாலை மறியல் செய்தனர். அவர்களுடன் பெண்களும் கலந்து கொண்டனர்.

அப்போது விவசாயிகள், "சென்ற வாரம் டி.சி.எச். ரக பருத்தி ஒரு கிலோ ரூ.68 முதல் 76 வரையிலும், ஆர்.சி.எச். ரக பருத்தி ரூ.55 முதல் ரூ.69 வரையிலும் ஏலம் விடப்பட்டது. இன்று (அதாவது நேற்று) நடந்த ஏலத்தில் டி.சி.எச். ரக பருத்தி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.55 வரைதான் வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு கிலோவுக்கு ரூ.20 விலை குறைந்துபோனதால் எங்களுக்கு கட்டுப்படியாகாது. குறைந்த விலைக்கு பருத்தியை விற்றால் எங்களுக்கு நட்டம். எனவேதான் இதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்று விவசாயிகள் வருத்தத்தோடு தெரிவித்தனர்.

அங்கு வந்த காவலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஆர்.சி.எம்.எஸ். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.