Farmers protested against the central and state governments who were hiding the farmers.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஔரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கௌதமன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், நாகை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் “வறட்சியின் காரணமாகவும், அதிர்ச்சியால் மரணமடைந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
வறட்சி காரணமாக பயிர் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.
வறட்சி நிவாரண பணிகளுக்கு தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
விவசாயிகள் கால்நடைகளை சந்தைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
இந்த ஆண்டு விவசாயிகளுக்கு போதிய அளவு பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.
பால் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.
நெல் மற்றும் அனைத்து வேளாண் உற்பத்தி பொருட்களுக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை தீர்மானிக்க வேண்டும்.
வறட்சி பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாய இடுபொருட்களுக்கும் வேளாண் கருவிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் மனோகரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சம்பந்தம், திராவிட கழக நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் பூபேஸ்குப்தா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் பரிமளச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் காவிரி தனபாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
