Farmers lock the road to the Co-operative Bank for paddy cultivation
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ளது வா.கொல்லைக்காடு கிராமம். இந்தக் கிராமத்தில் பூவாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கூட்டுறவு வங்கி மூலமாக இடையாத்தி, வா.கொல்லைக்காடு, பூவாளூர், நெய்வவிடுதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 2016 - 17-ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் வா.கொல்லைக்காட்டில் உள்ள பூவாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வங்கிக்கு பூட்டுப் போட்டுவிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மாரியப்பன், ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை தாசில்தார் ரகுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில, "விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும்" என்று உறுதியளிக்கப்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
