திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் பாலத்தில் வேகமாக வந்த ரயிலை தண்ட்வாளத்தில் ஏறி நின்று மறித்தனர். வேகமாக வந்த ரயில் கடைசியில் வேறு வழியில்லாமல் நின்றது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 காவிரிபிரச்சனையில் நம்பிக்கை தரும் தீர்ப்பாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. முதலில் ஒத்துகொண்ட மத்திய அரசு பின்னர் பின் வாங்கியது. மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மறுத்தது. 

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு கடந்த 6-ந் தேதி சென்னையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக் கத்தினர் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் அக்டோபர் 17 (இன்று), 18-ந் தேதிகளில் (நாளை) தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜக, அதிமுக தவிர பங்கேற்பதாக அறிவித்தன. ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என மொத்தம் 200 இடங்களில் இந்த ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 

திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் திருச்சி குடமுருக்கு பாலத்தின் மீது விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசார் தடையை மீறி குடமுருக்கு பாலத்தின் மீது ஏறினர். 

அப்போது அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. போராடும் விவசாயிகள் காளைகள் மற்றும் நாற்றுகளுடன் ரயிலை மறிக்க தண்டவாளத்தின் குறுக்கே நின்றனர். ரயில் வேகத்தை குறைக்காமல் பாலத்தின் மீது வந்துகொண்டிருந்தது. போலீசார் விவசாயிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் அசைவில்லை. 

எக்ஸ்பிரஸ் ரயில் பலத்த ஹாரன் சத்தத்துடன் வேகமாக வர போலீசார் செய்வதறியாமல் தாங்களாவது தண்டவாளத்தை விட்டு இறங்கி விடலாமா என்று யோசித்தபடி விவசாயிகளை அகற்ற முயன்றனர். ஆனால் விவசாயிகள் அசையவில்லை. கடைசியில் வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தனது வேகத்தை குறைத்தது. ரயில் எஞ்சின் டிரைவர் தண்டவாளத்தில் விவசாயிகள் அசையாமல் நிற்பதை பார்த்து வேகத்தை குறைத்து பின்னர், பாலத்தின் மீது ரயிலை நிறுத்திவிட்டார்.

இதன்பின்னர் தான் போலீசார் நிம்மதி அடைந்தனர். ஆனால் விவசாயிகள் சங்கத்தினர் தண்டவாளத்தில் நாற்று நடும் போராட்டத்தை துவக்கினர். அகற்ற வந்த போலீசாரின் காலில் விழுந்ததால் போலீசார் தயங்கி நின்றனர். விவசாயிகளின் வீரஞ்செரிந்த போராட்டத்தை போலீஸ் அதிகாரிகளே பாராட்டினர்.