திருவள்ளூர்

திருவள்ளூரில் ரசாயன கழிவால் விவசாய நிலங்களை மாசுபடுத்தும் விவசாய நிலங்களில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என்று ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்து தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:

“மாவட்டத்தில் இதுவரை சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிரில் 18 ஆயிரத்து 3 எக்டேரும், திருந்திய நெற்பயிரில் 8 ஆயிரத்து 980 எக்டேரும், சிறுதானியங்கள் 91 எக்டேரும் பயிரிடப்பட்டுள்ளது.

இதேபோல், பயறு வகைகள் 84 எக்டேரும், எண்ணெய் வித்துக்கள் 422 எக்டேரும், கரும்பு நடவு 111 எக்டேரும், மறுதாம்பு 2 ஆயிரத்து 331 எக்டேரும் பயிரிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை, நிகர பயிர் சாகுபடி பரப்பு 21 ஆயிரத்து 42 எக்டேர் ஆகும். கடந்த 2015 - 16-ஆம் ஆண்டு தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்த 10 ஆயிரத்து 700 விவசாயிகளுக்கு ரூ.18.152 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீடு செய்து பயனடைய வேண்டும்” என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதி விவசாயிகள் பேசியது:

“தங்களது பகுதியில் விவசாய நிலங்களையொட்டி இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீரால், அருகில் இருக்கும் விவசாய நிலங்கள் மாசடைந்து, பயிரிட முடியாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து, அனைத்து குறைதீர் கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பட்டா மாற்றம் குறித்த மனுக்கள் மீது விரைவில் தீர்வு காண வேண்டும்” என்று அவர்கள் கோரினர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்பாலின், விசைத்தெளிப்பான் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, மானிய விலையில் காய்கறி விதைகள் ஆகியவற்றை ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்து வழங்கினார்.

இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ் ஜோ குமார் பிரைட், தோட்டக்கலை துணை இயக்குநர் முத்துதுரை, உதவி ஆட்சியர் (பயிற்சி) பவன் குமார் க.கிரியப்பனவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.