Farmers demanding to open water to the Pallaiyur stream road Before the fight began ...
திருவாரூர்
திருவாரூரில் உள்ள பாலையூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் மற்றும் மக்கள் சாலை மறியல் ஈடுபட முயன்றனர். ஆனால், போராட்டம் தொடங்குவதற்கு முன்பே அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசப்படுத்தியதால் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சாந்தமாணிக்கம், மரவாக்காடு, கீழநத்தம், இடையர்நத்தம், வல்லான்குடிகாடு, பழம் பேட்டைநத்தம், கண்ணாரபேட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு, ராதாநரசிம்மபுரம், வல்லூர், தென்பரை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்தக் கிராமங்களுக்கு பாசனம் பெறும் வடவாறு பிரிவு பாலையூர் கிளை வாய்க்காலில் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் வராததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தொடர்புடைய வாய்க்காலை தூர்வாரி உடனடியாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருமக்கோட்டை சாலையில் பைங்காநாடு - துளசேந்திரபும் சந்திப்பில் சாலைமறியல் நடைபெறும் என்று விவசாயிகள் மற்றும் மக்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று சாலை மறியல் செய்ய பைங்காநாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமையில் விவசாயிகள் மற்றும் மக்கள் திருமக்கோட்டை சாலையில் கூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பொதுப்பணிதுறை அதிகாரிகள் சாலை மறியல் செய்வதற்கு முன்பே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து விவசாயிகள் அமைதியாக கலைந்துச் சென்றனர்.
