Farmers cross the road in Thiruvannamalai to put the price on rice immediately ...

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நெல்லுக்கு உடனடியாக விலை போட வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது. கடந்தாண்டு பெய்த மழையினால் தற்போது விளைச்சல் அதிகமுள்ளதால் இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நெல்வரத்து அதிகம் உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 4000 மூட்டைகள் வரை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். 

இங்கு நல்ல விலை கிடைப்பதால். சேத்துப்பட்டு மார்க்கத்தில் தேவிகாபுரம் வரையிலும், வேலூர் மார்க்கத்தில் சந்தவாசல் வரையிலும், திருவண்ணாமலை மார்க்கத்தில் கலசப்பாக்கம் வரையிலும் உள்ள விவசாயிகள் இந்த குழுவுக்கு நெல்லினை கொண்டு வருகின்றனர். 

ஆனால், ஒரு நாளைக்கு சுமார் 2000 முதல் 2500 மூட்டைகள் மட்டுமே எடைபோடப்பட்டு வியாபாரிகளால் விலை போடப்பட்டு வெளியே ஏற்றப்படுகிறது. இதனால் மூட்டைகள் தேக்கமடைகிறது. 

மேலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால், கூலித் தொழிலாளிகளால் மூட்டை தூக்கும் பணியினை அதிகம் செய்ய முடியவில்லை. இதனால் அதிகபட்சம் 2000 மூட்டைகள் மட்டுமே எடை போட முடியும் என்றதால், நேற்று கண்காணிப்பாளர் ரோகேஷ் விவசாயிகளை நாளை (அதாவது இன்று) வரச்சொல்லி உள்ளார்.

"நாங்கள் நெல் மூட்டைகளை கொண்டுவந்து போட்டுவிட்டு எத்தனை நாட்கள் காத்திருப்பது என்றும், உடனடியாக எடைபோட்டு, விலை போட வேண்டும்" என்று வலியுறுத்தியும் வேலூர் - போளூர் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதுபற்றி தகவல் அறிந்ததும் போளூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர், எடை போடுபவர்களின் சங்க பிரதிநிதிகள், மூட்டை தூக்குபவர்களின் சங்க பிரதிநிதிகள் உடன் காவலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

தற்போது வரும் நெல்வரத்தினை கருத்தில் கொண்டு மூன்று தரப்பினரும் ஒருவருக்கொருவர் அனுசரணையோடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் வியாபாரிகள் நெல்லுக்கான விலையினை போட்டு, மூட்டைகள் ஏற்றப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.